ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி? எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மக்கள் தர்ணா
கோவை: கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கரையில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நேற்று மேற்கொண்ட பணியை, பொதுமக்கள், விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது. கோவை வடக்கு பகுதியில் உள்ள பிரதான நீராதாரமான சின்ன வேடம்பட்டி ஏரி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏராளமான தடுப்பணைகள், கால்வாய்கள் உள்ளதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஏரியின் கரையில், மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்துக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் துவங்கிய நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன், இங்கு கட்டடம் கட்டும் பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாயினர். இதையறிந்த சின்னவேடம்பட்டி ஏரிக்கு நிலம் எடுப்பு நடவடிக்கையில் நிலம் கொடுத்த விவசாயிகள், இப்பகுதி பொதுமக்கள் என, 200க்கும் மேற்பட்டோர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அமைவிட நிர்ணய கோட்பாடுகளுக்கு எதிராக கட்டுமானப் பணிகள் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. தர்ணாவில் ஈடுபட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டன. சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன், சின்னவேடம்பட்டி வி.ஏ.ஓ., பாண்டியன் ஆகியோர், பொதுமக்களிடமும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாலை 4:00 மணியளவில் பணிகளை நிறுத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். கட்டுமானப் பணிகளுக்கு கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி., இயந்திரம், டிப்பர் லாரிகள் வெளியே எடுத்து செல்லப்பட்டன. தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.