பூச்சியூரில் சிவராத்திரி கோலாகலம்; ஆணிக்கால் பாத ரட்சை அணிந்த பூசாரி
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் சிவராத்திரி விழாவை ஒட்டி கோவில் பூசாரி ஆணிக்கால் பாதரட்சை அணிந்து ஊர்வலமாக நடந்து வந்தார்.கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர் உள்ளது. இங்கு சிவராத்திரி விழாவை ஒட்டி மகாலட்சுமி திருக்கோயில், வீரபத்திரசாமி- தொட்டம்மாள் திருக்கோவில், வேட்டைக்கார சாமி கோவில்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் அருகே உள்ள மைதானத்தில் மூன்று கோவில்களின் சுவாமிகளும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, கோவிலை நோக்கி நேற்று காலை திருவீதி உலா வந்தது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடந்தன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வேட்டைக்கார சாமி கோவில் ஊர்வலத்தின் போது, கோவில் பூசாரி காலில் 'பாதக்கொரடு' எனும் ஆணிக்கால் பாத ரட்சையை அணிந்து கொண்டு ஊர்வலமாக நடந்து வந்தார். விழாவில், கோவை நகரை சுற்றியுள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.