வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர் திருத்தப் பணியில் அதிர்ச்சி
பொள்ளாச்சி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களில், இடம்பெயர்ந்த இரட்டை பதிவு மற்றும் இறந்தவர் பட்டியல் எண்ணிக்கை அதிகம் கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. அவ்வகையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ..) நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர, பத்து பி.எல்.ஓ.க்களுக்கு ஒருவர் என்கிற அடிப்படையில், பி.எல்.ஓ., மேற்பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், இதற்கான பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. பி.எல்.ஓ.,க்கள், வீடு வீடாக சென்று தீவிர திருத்தத்துக்கான படிவத்தை வழங்கி வருகின்றனர். வாக்காளர் வாயிலாகவே, படிவத்தை பூர்த்தி செய்து வழங்கவும் அறிவுறுத்துகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களில், இடம்பெயர்ந்த இரட்டைப்பதிவு மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் கண்டறியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு பி.எல்.ஓ.வும், தினமும், 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் செல்கின்றனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவம், திருத்தம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவம் விபரங்களை அவர்களுக்கான 'பி.எல்.ஓ., ஆப்' வாயிலாக பதிவேற்றம் செய்கின்றனர். அதில், ஒவ்வாரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும், இடம்பெயர்ந்த பெயரில் இரட்டை பதிவு, இறந்தவர் விபரம் அதிகம் கண்டறியப்படுகிறது. வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் பெயரை நீக்கம் செய்ய, படிவம் - 7 வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பலர், புகாரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு, கூறினர்.