உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீதி பெயர் பலகைகளில் ஜாதியை நீக்குங்க: தி.மு.க., பெயரில் கொடுத்த மனுவால் அதிர்ச்சி

வீதி பெயர் பலகைகளில் ஜாதியை நீக்குங்க: தி.மு.க., பெயரில் கொடுத்த மனுவால் அதிர்ச்சி

கோவை; கோவையில், வீதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களில் உள்ள ஜாதியை நீக்கக்கோரி, தி.மு.க., லெட்டர் பேடில், மாநகராட்சியில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.'ரேஸ்கோர்ஸ்' ரகுநாத் என்பவர், தி.மு.க., லெட்டர் பேடு பயன்படுத்தி, கோவை மாநகராட்சியில் நேற்று கொடுத்த மனுவில், 'கோவையில் வைக்கப்பட்டுள்ள வீதி பெயர்களில், ஜாதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவையின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள், சாதனையாளர்கள் படத்துடன் சாதனைகளை குறிப்பிட்டு உள்ளீர்கள்.கோவைக்கு பெருமை என்றாலும், சாதனையாளர்களுக்கு பின்னால் ஒட்டியுள்ள ஜாதியை குறிப்பிடாமல் இருந்தால், மற்றவர்களும் பாராட்டுவார்கள். இதேபோல், ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் ஜாதி பெயரில் உள்ள வீதி பலகைகளை சரி செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பெயர் பலகையில் இருந்த ஜாதி பெயரை, தார் பூசி அழிக்கும் வேலையில் இவர் ஈடுபட்டார்.சர்ச்சையானதால், தி.மு.க.,வில் இருந்து அவரை நீக்க, கட்சி தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின், ரேஸ்கோர்ஸில் தார் பூசிய பெயர் பலகையை சுத்தம் செய்து, ஜாதிப்பெயருடன் மீண்டும் வைக்கப்பட்டது.இச்சூழலில், ரேஸ்கோர்ஸ் மட்டுமின்றி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வீதி பலகைகளில் ஜாதிப் பெயரை நீக்கச் சொல்லி, தற்போது கடிதம் கொடுத்திருப்பது, தி.மு. க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக, தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது, ''ரகுநாத் கூறிய கருத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி பெயரை பயன்படுத்தியதற்கு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை