உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரேஷன் கார்டு வைத்திருப்போரின் முழு விபரம் சேகரிக்க உத்தரவு; வீடு வீடாக வருகின்றனர் கடை ஊழியர்கள்

 ரேஷன் கார்டு வைத்திருப்போரின் முழு விபரம் சேகரிக்க உத்தரவு; வீடு வீடாக வருகின்றனர் கடை ஊழியர்கள்

பொள்ளாச்சி: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்களை பற்றிய முழு விவரங்களை ரேஷன் கடைகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தும் திட்டத்துக்கு இ.கே.ஒய்.சி., என பெயர். அதை மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்க, மாவட்டவழங்கல் அலுவலர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். ஆனால், இரண்டு மாதம் கூடுதல் அவகாசம் கொடுத்த பிறகும், கோவை மாவட்டத்தில் உள்ள 11.5 லட்சம் கார்டுதாரர்களில், 90 சதவீதம் பேர் மட்டுமே விவரங்களை பதிவு செய்தனர். மீதி 10 சதவீதம் பேரின் விவரங்களையும் சேகரித்து பதிவு செய்யும்படி அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது. அதனால், விடுபட்ட 1.15 லட்சம் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று, பதிவு செய்யும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள் துவங்கி உள்ளனர். இறந்தவர்கள், வெளியூர் அல்லது வெளிநாடு சென்றவர்கள், வீடு மாறியவர்கள், கைரேகை தேய்ந்ததால் பதிவு செய்ய முடியாதவர்கள் இந்த 10 சதவீதத்தில் அடங்குவர். அவர்களை கண்டுபிடித்து, கார்டில் இருந்துபெயர் நீக்க வேண்டும். அதற்கு முன், கார்டு வைத்துள்ளவர்களின் உண்மை நிலையை அறியும் பணி துவங்கப்பட்டுள்ளதாக, வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார். ரேஷன்கடை பணியாளர்கள், மதியம் வரை ரேஷன்கடையில் இருந்து பொருட்களை வினியோகம் செய்து விட்டு, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கடையை பூட்டிவிட்டு, களத்திற்கு சென்று இ.கே.ஒய்.சி., பதிவு செய்யும் பணி செய்ய வேண்டும். தினசரி மாலை 5:30 மணிக்கு, கூகுள் மீட்டில் அந்த நாளில் பதிவு செய்த சரியான விவரத்தை பதிவிட வேண்டும். பணிக்கு செல்லும் முன், இது குறித்த தகவலை ரேஷன் கடை அறிவிப்பு பலகையில் எழுதிவிட்டு செல்ல வேண்டும் என, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை