உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளிடம் அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்

குழந்தைகளிடம் அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்

ஒ ரு வீட்டில் குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லை என்றால், மொத்த வீடும் நிம்மதி இழந்து விடும். ஐந்து வயது வரை, குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்னை வந்து போகும் என்றாலும், அறிகுறிகளுக்கு ஏற்ப, கவனம் செலுத்துவது முக்கியம். இது குறித்து, கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன்ராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது... குழந்தைகள் அடிக்கடி எதிர்கொள்ளும்,பொதுவான உடல்நலகுறைகள் என்னென்ன? குழந்தைகளிடம், தொற்று பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. சளி, காய்ச்சல் போன்ற நுரையீரல் பிரச்னைகள், டயேரியா, வாந்தி மற்றும் தோல் பாதிப்புகள் பொதுவான உடல் நலக்கோளாறுகள். இவை தவிர, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக ஊட்டச்சத்தால் உடல் பருமன் பிரச்னைகளையும் அதிகம் காண்கிறோம்.பத்து வயதுக்கு மேல் ஹார்மோன் பிரச்னை, தைராய்டு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல்நோய்கள் குழந்தைகளிடையே அதிகரித்து வருகிறதா? குழந்தைகள் உடல் பருமன் என்பது, மிகவும் கவனம் செலுத்தவேண்டிய பிரச்னை. துரித உணவுகள், சாக்லேட், உடல் இயக்கமின்மை போன்ற தவறான வாழ்வியல் முறை அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் இப்பிரச்னை அதிகம் இருப்பதையும் காண்கிறோம். இதன் காரணமாக,இளம் வயதிலேயே அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.சரிவிகித உணவு பழக்கவழக் கம் அவசியம். தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி தேவை? இன்றைய குழந்தைகள் தனிக்குடும்பம், அபார்ட்மென்ட் கலாசாரம் காரணமாக,நான்கு சுவற்றுக்குள் இயந்திரங்களுடன் நேரங்களை செலவிடுகின்றனர்.குறைந்தபட்சம், தினமும் ஒரு மணி நேரமாவது வெளி இடத்தில் ஓடி, ஆடி விளையாட வேண்டும். மொபைல், டிவி போன்ற திரை நேரம் குழந்தைகளின் மனநிலைக்கும் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? கட்டாயமாக. உடல் நலம் பொறுத்த வரையில், உடல் பருமன், குனிந்து கொண்டும், படுத்துக் கொண்டு பார்ப்பதால், முதுகுதண்டுவடம் சார்ந்த பாதிப்புகள், கண் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளன. பெற்றோர் தவறவிடக் கூடாத எச்சரிக்கை அறிகுறிகள் எவை? காய்ச்சல் இரண்டு நாட்கள் தாண்டி தொடர்ந்தாலோ, சளி, இருமல் அதிகமாகவோ, மூச்சுவிட சிரமம் இருந்தாலோ,கட்டாயம் செக்அப் செய்துகொள்ள வேண்டும். பதின்பருவ வயதில் நன்றாக விளையாடிய குழந்தை திடீரென்று சோர்ந்து இருப்பது, குழந்தைகளின் எடை தொடர்ந்து குறைவது, போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. மருத்துவமனைக்கு அவசரமாக இரவில் குழந்தையை துாக்கிக்கொண்டு வருபவர்களில், 70 சதவீதம் பேர் இதுபோன்ற அறிகுறிகளை கண்டுகொள்ளாதவர்களே. குழந்தைகளுக்கு சுகாதார பரிசோதனை அவசியமா? பிறந்த மூன்று மாதங்களில், மாதம் ஒரு முறையும், 3 மாதம் -2 வயது வரை மூன்று மாதத்திற்கு ஒரு முறை, 2 வயது -10 வயது வரை ஆண்டுக்கு ஒரு முறையும் பரிசோதனை அவசியம். இதில், உயரம், தலை சுற்று, எடை, பல், கண், காது கேட்கும் திறன் போன்றவை பரிசோதனை செய்யப்படும். பிறந்தது முதல் தவழ்வது, எழுவது, அமர்வது, நடப்பது, பேசுவது போன்ற வளர்ச்சிகளை கவனித்து, தாமதம் இருந்தால் டாக்டரை அணுகவேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஏதேனும் அறிவுரை? கண் பிரச்னையால் பல குழந்தைகள் மதிப்பெண்கள் குறைவதை காண்கிறோம். சிறு குறைபாடுகளையும் அலட்சியப்படுத்தாமல், கவனம் செலுத்த வேண்டும்.படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகளை டாக்டரிடம் கூட்டிச்சென்று, ஐ.க்யூ., குறைபாடு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 2, 3ம் வகுப்பு படிக்கும் போதே கவனித்து, தெரப்பி வழங்கினால் மேம்படுத்த இயலும். பல வீடுகளில் காய்ச்சலுக்கு சுயமாக மருந்து பலர் வாங்குகின்றார்களே... காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மட்டும்;இதற்கு முன் டாக்டர் பரிசோதனை செய்து கூறியஅளவு கொடுக்கலாம். அளவுக்கு மீறி கொடுப்பது, குழந்தைகளுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இருமல், ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகளை, கட்டாயம் டாக்டர்கள் பரிந்துரை இன்றி வாங்க கூடாது. gmail.com98651 60865


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி