அதிரப்பள்ளி ரோட்டில் ஒற்றை யானை முகாம்
வால்பாறை ; வால்பாறை - சாலக்குடி செல்லும் ரோட்டில் வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்ததால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வால்பாறையிலிருந்து சாலக்குடிக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் மற்றும் கேரள மாநில அரசு பஸ் சென்றது.அப்போது, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் ரோட்டில் பத்திரிப்பாலம் அருகே, கபாலி என்ற ஒற்றை யானை நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ரோட்டை மறிந்து வாகனங்களை தடுத்தது. இதனால், பீதியடைந்த சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை பின் நோக்கி நகர்த்தினர்.ஆனாலும், யானை விடாமல் விரட்டியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், நீண்ட நேரத்திற்கு பின் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வால்பாறை - சாலக்குடி ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கேரள வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை - சாலக்குடி ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த வழியாக வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். யானைகளை கண்டதும் ஹாரன்களை அடித்து ஒலி எழுப்பி விரட்டுவதை தவிர்க்க வேண்டும்.யானைக்கு கோபம் வரும் வகையில் கூச்சலிடவோ, ஹாரன் அடிக்கவோ கூடாது. ரோட்டில் யானைகள் நடமாடினால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.