உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரிந்தது சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பளவு; காலநிலை மாற்றமும் ஒரு காரணம்

சரிந்தது சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பளவு; காலநிலை மாற்றமும் ஒரு காரணம்

கோவை; காலநிலை மாற்றத்தால், கோவை மாவட்டத்தில், 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த சின்ன வெங்காயம், ஆறாயிரம் ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. கோவை வட்டாரத்தில் தீத்திப்பாளையம், மாதம்பட்டி, தென்கரை, மத்துவராயபுரம், பூலுவப்பட்டி, செம்மேடு, தேவராயபுரம், நரசிபுரம், தென்னமநல்லுார், தொண்டாமுத்துார் சுற்றுவட்டாரங்களில், 15 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஜூன் மாதம் முதல் செப்., வரையான தென்மேற்கு பருவ காலத்தை முன்னிட்டு, இந்த விவசாயம் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டு, மே மாதத்தின் இறுதியில், முன்பே பருவமழை துவங்கி விட்டதால், சின்ன வெங்காயம் சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.அதிகமாக ஈரம் இருந்தால், உழவு மேற்கொள்ள முடியாதது உட்பட பல காரணங்களால், 15 முதல் 20 நாட்கள் வரை, சின்ன வெங்காயம் நடவு தள்ளிப்போனது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி கூறியதாவது: பருவமழை முன்கூட்டியே வந்ததால், விவசாயிகளால் முன்னேற்பாடு பணிகளை முறையாக மேற்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற சில காரணங்களால், 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த சின்ன வெங்காய சாகுபடி, 6 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து, 100 முதல் 120 நாட்கள், பட்டறையில் இருப்பு வைப்போம். இதற்கும் காலநிலை அவசியமாகிறது. அதிக வெயில் நிலவக் கூடாது. போதியளவு காற்றோட்டம் இருக்க வேண்டும். காற்றோட்டம் இருக்கும் பட்சத்தில் தான், வெங்காயம் காயும் நிலைக்கு வரும். கூடுதல் வெயில் நிலவினால், சின்ன வெங்காயம் அழுகக் கூடிய சூழலும் ஏற்படும். இருப்பு வைத்த 100 முதல் 120 நாட்களுக்கு பின், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், ஏற்றுமதி ஆர்டர் இருந்தால், இலங்கைக்கும் அனுப்பப்படும். இந்நிலையில், சின்ன வெங்காய சாகுபடியில் இருந்து அறுவடை வரை வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி