சின்ன வெங்காய விதைக்கு வந்த சோதனை.. உள்ளூர் மலிவு; வெளியூர் மவுசு! மானிய விலையில் வழங்க எதிர்பார்ப்பு
மேட்டுப்பாளையம்: கோவையில் உற்பத்தி செய்யப்பட்ட விதை சின்ன வெங்காயம் விலை குறைந்து, விற்பனை ஆகிறது. ஆனால், வெளி மாவட்ட சின்ன வெங்காயம் விதையை அதிக விலை கொடுத்து, உள்ளூர் விவசாயிகள் வாங்குகிறார்கள். அரசே கொள்முதல் செய்து அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் வழங்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.கோவை மாவட்டத்தில் துடியலுார், மேட்டுப்பாளையம், காரமடை, தொண்டாமுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்யப்படுகிறது.கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிகம் பயிர் செய்வது கிடையாது. தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகம் பயிர் செய்வர். இக்காலகட்டத்தில் சின்ன வெங்காயத்தை விதையாக உற்பத்தி செய்து, சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படும்.இந்த விதைகளை விவசாயிகள் விளை நிலங்களில் உள்ள பட்டறைகளில் சேகரித்து வைத்து கொண்டு, தென்மேற்கு பருவமழை துவங்கும்போது அல்லது ஜூன் மாதம் துவக்கத்தில் பயிர் செய்ய துவங்குவர். மவுசு இல்லை
கோவையில் உற்பத்தி செய்யப்படும் விதை சின்ன வெங்காயத்தை உள்ளூர் விவசாயிகள் வாங்க ஆர்வம் காட்டாமல் இருப்பதால், கிலோ ஒன்று ரூ.20 முதல் ரூ.28 வரை தான் விற்பனை ஆகிறது. அதே சமயம், பெரம்பலூர், துறையூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விதை சின்ன வெங்காயத்தை கிலோ ஒன்றுக்கு ரூ.40 வரை விலை கொடுத்து, விவசாயிகள் வாங்கி வருகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துணைத் தலைவர் பெரியசாமி கூறியதாவது:- கோவைக்கு அடுத்தப்படியாக, பெரம்பலூர், துறையூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.உள்ளூர் சின்ன வெங்காயத்தை அதே மண்ணில் மீண்டும் பயிர் செய்வதால் உற்பத்தி குறையும் என, விவசாயிகள் எண்ணுகின்றனர்.வெளியூர் விதை சின்ன வெங்காயத்தை இங்கு விதைத்து பயிர் செய்வதால் மகசூல் அதிகரிக்கும்; உற்பத்தி செலவும் குறையும். இது உண்மை தான்.தமிழக அரசே விதை சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து விவசாயிகள் அனைவருக்கும் மானிய விலையில் வழங்க வேண்டும். இதனால், சின்ன வெங்காயத்தின் உற்பத்தி அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.