மாணவர்களின் முன்னேற்றம் குறித்து எஸ்.எம்.சி., கூட்டத்தில் ஆலோசனை
கோவை: அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், நவம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி.,) கூட்டமானது, அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் தலைமையில் நடந்தது. திறன் இயக்கம், எண்ணும் எழுத்தும், உயர்க்கல்வி வழிகாட்டித் திட்டம், மகிழ்முற்றம் செயல்பாடுகள், மன்றச் செயல்பாடுகள், இல்லம் தேடிக் கல்வி, மணற்கேணி போன்ற கல்வித் திட்டங்கள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கலைத்திருவிழா போன்ற போட்டிகளில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்பதை ஊக்குவிக்க, அவர்களின் ஆடை அலங்காரம் மற்றும் இதர தேவைகளுக்காக 'ஸ்பான்சர்கள்' மூலம் நிதி உதவி பெற, முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளி வருகையைப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க, கிளப் செயல்பாடுகளை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தடையின்றி கிடைப்பதற்கு, அவர்களின் ஆதார் எண் புதுப்பித்தல் குறித்து நடவடிக்கை எடுக்கவும், கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது' என்றனர்.