10 ஊராட்சிகளில் சமூக தணிக்கை
அன்னுார்; வடவள்ளி உள்பட 10 ஊராட்சிகளில், சமூக தணிக்கை நேற்று நடந்தது. கடந்த ஆண்டு, ஏப். 1 முதல், நடப்பு ஆண்டு மார்ச் 31 வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் குறித்த, சமூக தணிக்கை, கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும், பத்து ஊராட்சிகளில் நடக்கிறது.நடப்பு வாரத்தில், அன்னுார் ஒன்றியத்தில் வடவள்ளி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நஞ்சுண்டாபுரம், சூலுார் ஒன்றியத்தில் கணியூர், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் குமாரபாளையம், தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் மத்வராயபுரம், மதுக்கரை ஒன்றியத்தில் வழுக்கு பாறை உள்பட 10 ஊராட்சிகளில் கடந்த 18ம் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நேற்று சமூக தணிக்கை துவங்கியது. பணிகள் நடைபெற இடங்களில் அளவீடுகள் எடுக்கப்பட்டன. வருகிற 22ம் தேதி, 10 ஊராட்சி ஊராட்சிகளில், காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் 100 நாள் வேலை திட்டம் குறித்த சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.