ஒழுங்குமுறை கூடத்தில் சோலார் உலர் களம்
மேட்டுப்பாளையம் : காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சோலார் உலர் களம் அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது என கண்காணிப்பாளர் தெரிவித்தார்.காரமடையில் சிறுமுகை சாலை சாஸ்திரி நகர் அருகே, தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இதன் கண்காணிப்பாளர் யுவராஜ் கூறியதாவது:இங்கு, 1000 மெட்ரிக் டன் கிடங்குகள் உள்ளன. அறுவடை செய்த விளை பொருட்களை காய வைப்பதற்கு, இரண்டு இடங்களில் உலர் களங்கள் உள்ளன. விளை பொருள் கெடாமல் இருக்க, 50 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கும் உள்ளது.அறுவடை செய்த விளை பொருட்கள், விலை குறைவாக இருக்கும்போது, இருப்பு வைக்கவும். விலை உயர்வாக இருக்கும்போது, விற்பனை செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கிடங்குகள் உள்ளன. இதில் இருப்பு வைக்கும் விளை பொருட்களுக்கு, 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் இல்லை.அதற்கு மேல் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு குவின்டாலுக்கு, 25 பைசா வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பு வைத்துள்ள விளை பொருட்களுக்கு, 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படும். விரைவில் சோலார் உலர் களம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.