புதிய வீடுகளுக்கு வரி; சாப்ட்வேர் பிரச்னைக்கு தீர்வு
சூலுார்; ஊராட்சிகளில் புதிய வீடுகளுக்கு வரி விதிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், சாப்ட்வேர் பிரச்னை சரிசெய்யப்பட்டதால்,பொது மக்கள், ஊராட்சி செயலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஊராட்சிகளில் சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரியினங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய வீடுகளுக்கு வரி விதித்து, பணம் வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. புதிதாக வீடு கட்டியவர்கள் , வரி விதிப்புக்காக ஊராட்சி அலுவலகங்களில் ஆவணங்களை கொடுத்து காத்திருந்தனர். மூன்று மாதங்கள் ஆகியும் வரி விதிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். பழைய வீடுகளுக்கு மட்டும் உடனடியாக வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' புதிய வீட்டுக்கு வரி கட்ட ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், வரி விதிக்க தாமதம் செய்து வருகின்றனர். தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தாலாவது அவர்களிடம் கேட்கலாம். அவர்களும் தற்போது இல்லை. அலுவலகத்துக்கு சென்றால், சாப்ட்வேர் பிரச்னை உள்ளதால் லேட்டாகும், என்கின்றனர். இதனால், ஊராட்சி அலுவலகத்தில் உள்ளோருடன் வீண் விவாதங்கள் ஏற்படுகிறது,' என்றனர். என்ன பிரச்னை வரி விதிப்பு பிரச்னை குறித்து ஊராட்சி செயலர்கள் தரப்பில் கூறியதாவது: புதிய நிதியாண்டில் சொத்து வரியை உயர்த்தி வரி வசூல் செய்ய அரசு உத்தரவிட்டது. அதற்கேற்ப சாப்ட்வேரில் கடந்த ஏப்., மாதம் முதல் மாற்றம் செய்யும் பணி நடந்தது. அதை முடிப்பதற்கு, இரு மாதங்கள் ஆகியது. சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பழைய வரியை வசூலிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பழைய சாப்ட்வேரை மீண்டும் அப்டேட் செய்யும் பணி நடந்தது. இதனால், கடந்த ஏப்., முதல் புதிய வீட்டுக்கு வரி விதிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த விபரங்களை, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் வசதி இல்லாமல் இருந்தது. இதனால், பலரது விண்ணப்பங்கள் தேங்கும் நிலை உருவானது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக, புதிய வீடுகளுக்கு வரி விதிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.