ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு; இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்
மேட்டுப்பாளையம் : ஒரு வாரமாக வேலை நிறுத்தம் செய்து வந்த, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பிரச்னைக்கு, பேச்சு வார்த்தை வாயிலாக தீர்வு கிடைத்துள்ளது. அதனால் இன்று முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். மேட்டுப்பாளையம் நகரில், நாள் ஒன்றுக்கு நகரில், 22 டன் குப்பைகள் சேகரம் ஆகின்றன. 54 நகராட்சி தூய்மை பணியாளர்கள், 180 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., தொகைகளை அலுவலகத்தில் கட்டி, ரசீது வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதம் ஐந்தாம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். வேலை செய்ததற்கான சம்பள பில் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஒரு வாரமாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வந்தனர். இதனால் நகரில் குப்பைகள் பல இடங்களில் சுத்தம் செய்யாமல் குவிந்து கிடந்தன. நேற்று தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர், விடுதலை சிறுத்தை கட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகிகள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் பி.எப்., இ.எஸ்.ஐ., தொகை கட்டி ரசீது வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும். உபகரணங்கள் வழங்கப்படும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை நிறுத்தத்தை ரத்து செய்து, இன்று முதல் மீண்டும் வேலைக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.