தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மாவட்டத்தில் 70 இடங்கள் ஹாட்ஸ்பாட்
கோவை; தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், மாவட்டம் முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று நடத்தப்பட்டது.நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே, வரும், 27ம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில், தென்மேற்கு பருவமழை துவங்கியதாக அறிவிக்கப்பட்டது. அரசு அறிவுறுத்தலின்படி, தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.இதன் ஒருபகுதியாக மாவட்டம் முழுவதும், நேற்று மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவைபுதூர் தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய தீயணைப்பு அலுவலர் மார்ட்டின், சிறப்பு நிலை அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், நேற்று பேரூர் பெரிய குளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை, மீட்பது குறித்த ஒத்திகையை நடத்தினர். மாவட்டத்தில் உள்ள, 14 தீயணைப்பு நிலையங்களிலும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறுகையில்,''மாவட்டம் முழுவதும் உள்ள. 300 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொள்ளாச்சி சுடுகாட்டு பள்ளம், கோவை சங்கனுார் உள்ளிட்ட, 70 இடங்கள் 'ஹாட்ஸ்பாட்' ஆக பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. ரப்பர் படகுகள், மீட்பு உபகரணங்கள், கயிறுகள், லைப் ஜாக்கெட், கான்கிரீட் கட்டர்கள், உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார். பருவமழையை எதிர்கொள்ள தயார்
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்று, பருவமழையின் போது தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்பணிகள் துறையினரின், ஒத்திகையை பார்வையிட்டார்.பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் படகு, இரும்பு மற்றும் கான்கிரீட்டுகளை வெட்டி அகற்றும் இயந்திரங்கள், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பவர்களை கண்டறிய உதவும் கருவிகள் உள்ளிட்டவற்றை, தீயணைப்புத்துறையினர் மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ராமச்சந்திரன், ஒவ்வொரு இயந்திரங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.