கோவை -- ராஜஸ்தானுக்கு சிறப்பு விமான சுற்றுலா
ஐ.ஆர்.சி.டி.சி., பாரத் கவுரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி கல்லூரிகளுக்கான கல்வி சுற்றுலா போன்றவற்றை இயக்கி வருகிறது. ரயிலில் மட்டுமின்றி, விமானம் வாயிலாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதில், ராஜஸ்தான் சுற்றுலாவுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இந்நிலையில், கோவை - ராஜஸ்தான் இடையேயான விமான சுற்றுலாவை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.வரும், மார்ச், 18ம் தேதி சுற்றுலா துவங்குகிறது. எட்டு இரவு, ஒன்பது பகல் என, பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.சுற்றுலாவில் ஜோத்பூர், ஜெய்சால்மர், பிகானேர், உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அமைந்துள்ள கோட்டைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் மிகப்பெரிய தார் பாலைவனம் ஆகிய இடங்களைக் காணலாம்.இதற்கு, 47,350 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமானக்கட்டணம், ஏ.சி., ஓட்டலில் தங்கும் வசதி, ஏ.சி., வாகன வசதி, உணவு (காலை, இரவு) ஆகியவை அடங்கும்.மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி., சலுகைகளை பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 90031 40655 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -