மேலும் செய்திகள்
வேகத்தடை இடையே ஜல்லிக்கல் விபத்துகளை தடுக்குமா?
04-Aug-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பல்லடம் வழித்தடத்தில், குறுகிய துாரத்தில் அடுத்தடுத்த அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான வேகத்தடைகள் சமன் செய்யப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பொள்ளாச்சியில் இருந்து தொலைதுார ஊர்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில், சந்திப்புகள், கிராமங்களை கடந்து செல்லும் சாலைகளில் ஆங்காங்கே சிறிய அளவிலான வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்) அமைக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், இவ்வழித்தடங்களில், வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில், வாகனங்கள் வேகத்தை குறைத்தே இயக்கப்பட்டன. ஆனால், அவ்வழித்தடத்தை கடந்து செல்வதற்கான நேரம் அதிகரித்ததால், வேகத்தடையை பொருட்படுத்தாமலே ஓட்டுநர்கள், வாகனங்களை இயக்கி வருகின்றனர். அதிலும், பல்லடம் ரோட்டில், குறுகிய துார இடைவெளியில், சிறிய அளவிலான வேகத்தடை சற்று தடிமனாக அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், காமநாயக்கன்பாளையம் அருகே வேகத்தடையை கடக்க முற்பட்ட லாரி ஒன்று நிலைதடுமாறி, ரோட்டோர பேக்கரிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இருவர் படுகாயமடைந்த நிலையில், வேகத்தடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது, நெடுஞ்சாலைத்துறையினர், வேகத்தடைகளின் நடுவே தார் ஊற்றி, அதனை சமன் செய்து வருகின்றனர். இதனால், பொள்ளாச்சியில் இருந்து சுல்தான்பேட்டை மார்க்கமாக பல்லடம் செல்லும் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோன்று, பொள்ளாச்சியில் இருந்து, கோவை, ஆழியாறு, உடுமலை, மீன்கரை, பாலக்காடு வழித்தடத்தில் 'ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்' அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியின்றி பயணிக்கின்றனர். அதனால், அனைத்து வழித்தடத்திலும் உள்ள இந்த அமைப்புகளை சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
04-Aug-2025