உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உற்பத்தித் துறையை அழிக்கிறது மாநில ஜி.எஸ்.டி. போசியா கடுமையான குற்றச்சாட்டு

உற்பத்தித் துறையை அழிக்கிறது மாநில ஜி.எஸ்.டி. போசியா கடுமையான குற்றச்சாட்டு

கோவை: 'மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகளின் தேவையற்ற கெடுபிடி மற்றும் அதிகபட்ச அபராதத்தால் உற்பத்தி தொழில்துறை அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான 'போசியா' குற்றம் சாட்டியுள்ளது. குறு, சிறு தொழில்முனைவோரை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நடைமுறைகளைக் கைவிடக்கோரி, கோவை வணிக வரித்துறை இணை கமிஷனர் தாக்கரே சிவம் ஞானராவிடம், 'போசியா' கூட்டமைப்பு சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, 'போசியா' ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ரவீந்திரன், 'டான்ஸ்டியா' துணைத் தலைவர் சுருளிவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள், 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு குறு, சிறு தொழில்நிறுவனங்களுக்கு ஏராளமான அபராத நோட்டீஸ்களை அனுப்பியுள்ளனர். ஜி.எஸ்.டி., கட்டாமல் மோசடி செய்வதர்களிடம் கடுமை காட்டலாம். ஜி.எஸ்.டி., முறையாக செலுத்தி, ஆவணங்களில் சிறு எழுத்துப் பிழை இருந்தாலும், ரோந்துப் படையினரால் மிகக் கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத அறிவிப்பு நேரில் தரப்படுவதில்லை. ஜி.எஸ்.டி., போர்டலில் போடப்படுகிறது. இதை பெரும்பாலும் நிறுவனங்களோ, வரி நிபுணர்களோ கவனிக்கத் தவறுகின்றனர். சரியான நேரத்தில் பதிலளிக்க தவறி விடுகின்றனர். அப்போது, அபராதத்துக்கும் அபராதம் விதிக்கின்றனர். எவ்வித அறிவிப்பும் இன்றி, வங்கிக் கணக்கை முடக்கி விடுகின்றனர். தமிழகத்தில் அதிக குறு, சிறு தொழில்கள், அதிலும் உற்பத்தித் துறை சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ளன. இத்தொழிலை அழிக்கும் வகையில் மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் ரெய்டு, கண்காணிப்பு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். வர்த்தகத்தை எளிதாக்குவதற்குப் பதில், குறு, சிறு தொழில்களை, மாநில ஜி.எஸ்.டி., துறை முடக்கி வருகிறது. இதுதொடர்பாக, இணை கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்குவதாக தெரிவித்துள்ளார். கோவை பிராந்தியத்தில், ஜி.எஸ்.டி., தொடர்பான பிரச்னைகள் குறித்து மாதாந்திர கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இதே பிரச்னை தொடர்பாக, கோவையின் 43 தொழில் அமைப்புகள் சார்பில், தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை வணிக வரித்துறை இணை கமிஷனரிடம் மனு அளிக்க வந்த, 'போசியா' நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை