கல்லுாரி மாணவர்களுக்கு மாநில அளவில் நாடக போட்டி
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், 'ஸ்வரம்' என்ற மாநில அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான நாடக போட்டிகள் நடந்தன. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்பாக இந்த போட்டிகள் நடந்தன. துவக்க விழாவில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் முத்துசாமி வரவேற்றார். மாருதி உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெயபால், விழா குறித்து அறிமுக உரையாற்றினார். வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஒன்பது கல்லுாரிகளில் இருந்து, 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, திருப்பூர் குமரன், பாரதிக்கு அருளிய ருக்மணி, நிவேதிதை, குயிலி, ஜல்காரிபாய், வேலுநாச்சியார், ராணி சென்னம்மாள், செண்பகராமன், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய நாடகங்களை அரங்கேற்றம் செய்தனர். இதில் பி.எஸ்.ஜி., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல் இடம், ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி இரண்டாம் இடம், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது. பரிசு, சான்றிதழ், ரொக்கம் ஆகியன வழங்கப்பட்டன.