உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊருக்குள் பஸ் செல்ல நடவடிக்கை ! சர்வீஸ் ரோடு பிரச்னைக்கு தீர்வு

ஊருக்குள் பஸ் செல்ல நடவடிக்கை ! சர்வீஸ் ரோடு பிரச்னைக்கு தீர்வு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதுார் ஊருக்குள் பஸ் வந்து செல்லும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார். கோமங்கலம்புதுாரில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சங்கம்பாளையம், கூளநாயக்கம்பட்டி, கோலார்பட்டி, மலையாண்டிபட்டிணம், கோமங்கலம், பீக்கல்பட்டி, கோழிகுட்டை உள்ளிட்ட 20க் கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து, இங்குள்ள பஸ் ஸ்டப்பை பயன்படுத்தி வருகின்றனர். கோமங்கலம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், பெரும்பாலான தனியார் பேருந்துகள் நிற்பதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், கோமங்கலம் புதுாரில் கடந்த மாதம்,17ம் தேதி மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, கடந்த மாதம் இப்பிரச்னை குறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. பொதுமக்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம் புதுார் பஸ் நிறுத்தம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் வழியாக தனியார் பஸ்கள் செல்கின்றன. இதற்குரிய தீர்வு காண வேண்டும்,' என்றனர். அப்போது, பஸ் உரிமையாளர்கள், கோமங்கலம்புதுார் அருகே மேம்பால பணிகள், சர்வீஸ் ரோடு பணிகள் நடைபெறுகின்றன. சர்வீஸ் ரோடு குறிப்பிட்ட துாரம் இணைக்காததால், ஒரே வழியில் செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது,' என்றனர். இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், அதிகாரிகள், பஸ் உரிமையாளர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சர்வீஸ் ரோடு பணிகள் நிறைவடைந்து, தற்போது, கோமங்கலத்துக்கு பஸ்கள் செல்கின்றன. வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் கூறுகையில், ''மேம்பாலம் வழியாக பஸ்கள் செல்வதாகவும், சர்வீஸ் ரோடு பணிகள் முடிவடையாமல் இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சர்வீஸ் ரோடு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது அப்பணிகள் நிறைவடைந்து பஸ்கள் ஊருக்குள் சென்று வருகின்றன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை