பொள்ளாச்சி: தபால் துறையின், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கிக்கான, ஏ.டி.எம்., மெஷின்கள் நிறுவன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தபால் அலுவலர் தெரிவித்தனர். தபால் துறையின், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கியில், சேமிப்பு கணக்கு துவக்க, 200 ரூபாய் மட்டுமே வைப்புத்தொகை என்பதால், அதிகமான வாடிக்கையாளர்கள், சேமிப்பு கணக்குகளை துவங்கி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, அனைத்து வித சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்வதற்கான வசதி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, வாடிக்கையாளர்கள் 'பிளே ஸ்டோரில்' உள்ள, ஐ.பி.பி.பி., மொபைல் ஆப் வாயிலாக அவரவர் வாரிசு நியமனம் செய்வது, மாற்றம் செய்தல் ஆகியவற்றை மேற்கொண்டும் வருகின்றனர். மேலும், 'ஆப்' பயன்படுத்தி தபால்காரர் உதவியுடன், தங்கள் கணக்கை ஆதார் 'சீடிங்' செய்து, அரசின் நேரடி மானியத்தை பெறவும் முனைப்பு காட்டுகின்றனர். தற்போது, தபால் வங்கி வாயிலாக, வாடிக்கையாளர்கள் விரைந்து பணம் பெறும் வகையில், அதற்கான ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலர்கள் கூறியதாவது: ஐ.பி.பி.பி., ஆப் வங்கி மற்றும் தபால் சேமிப்பு கணக்குடன் இணைத்து, ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியும். அத்துடன் செல்வமகள், தங்கமகன், லைப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு எளிமையாக வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பணம் செலுத்தலாம். தற்போது, தபால் ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவது மற்றும் நிர்வகிப்பது போன்ற பணிகளை புதிய தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், தபால் அலுவலகங்களில் உள்ள ஏ.டி.எம்.,கள் தற்காலிகமா மூடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏ.டி.எம்., மெஷின்கள், புதிதாக அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.