உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாள் தலைமை ஆசிரியர் ஆனார் மாணவி! தன்னம்பிக்கை அதிகரிப்பதாக மகிழ்ச்சி

ஒரே நாள் தலைமை ஆசிரியர் ஆனார் மாணவி! தன்னம்பிக்கை அதிகரிப்பதாக மகிழ்ச்சி

கோவை: காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி, 'ஒரு நாள் தலைமையாசிரியர்' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த திட்டம் மாணவ மாணவியரின் தன்னம்பிக்கையையும், தலைமை பண்பையும் அதிகரிக்க உதவு வதாக, பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார். காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில், கடந்த மூன்று ஆண்டுகளாக, 'ஒரு நாள் தலைமையாசிரியர்' என்ற சிறப்பு முயற்சி, முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களில் கல்வி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் சிறந்து விளங்கும் ஒருவரை, ஆண்டுதோறும் இந்தப் பொறுப்புக்காக தேர்வு செய்கின்றனர். இதன் மூலம் மாணவர்களிடம் தலைமைத்துவ பண்பு, தன்னம்பிக்கை மற்றும் கல்வியில் ஆர்வம் அதிகரிப்பதாக, தலைமையாசிரியர் விஜயலட்சுமி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்த பொறுப்பை வகித்த இரண்டு மாணவர்கள், தற்போது ஆர்.எஸ்.புரம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். இத்தகைய முயற்சிகள் மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக அமைகின்றன. ஒருவர் தலைமையாசிரியராக தேர்வாகும் போது, 'என்னால் முடியும்' என்ற எண்ணம் பிற மாணவர்களிடையே உருவாகி, பள்ளியின் தேர்ச்சி விகிதமும் உயர்ந்துள்ளது. காலை பிரார்த்தனை கூட்டத்தில், 'ஒரு நாள் தலைமையாசிரியர்' பெயர் அறிவிக்கப்படுவதால், இது மாணவர்கள் சாதிக்க தூண்டுதலாக உள்ளது,” என்றார். மாணவி குணவதி கூறுகையில், “தலைமையாசிரியர் நாற்காலியில் அமர்ந்தது, மிகவும் பெருமையாக இருந்தது. தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. பெற்றோரின் கனவையும், எனது கனவையும் நிறைவேற்ற கல்வியில் சிறப்பாக சாதிப்பேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை