பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் ஆர்வம்
பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' மெகா வினாடி -வினா போட்டி, பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர். அவ்வகையில், பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.தகுதிச்சுற்றில், 390 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'சி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 9ம் வகுப்பு மாணவி சனுஷ்கா, மாணவர் ஆஷிப்புல்லா ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகி அருட்தந்தை எபின் ஜோசப், பள்ளி முதல்வர் மேக்டலின், துணை முதல்வர் சத்திய சந்தான கவுரி, ஒருங்கிணைப்பாளர் பாத்திமா நிஜாரா, ஆசிரியர் மலர்விழி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். சிந்தனை திறனைஅதிகரிக்க உதவுது! முதல்வர் மேக்டலின் கூறுகையில், 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் அனைத்து விதமான செய்திகளையும், படங்களுடன் விளக்குகிறது. காலக் கண்ணாடியில் முன்னோர்களின் வாழ்க்கை முறையை கண் முன்னே கொண்டு வருகிறது. நுாற்றுக்கு நுாறு பகுதியில் குழந்தைகளின் சிந்தனை திறனை அதிகரித்து, அறிவுத் திறனை மேம்படுத்துகிறது. மனதை மகிழ்விக்க புதிதாக புதிர்களை தருகிறது. மொத்தத்தில் 'பட்டம்' இதழ் அனைத்து தகவல்களையும் அளித்து அறிவை வளர்த்து சிறகுகளை விரித்து வானில் பறக்க மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை அளிக்கிறது.
அறிவு, ஆற்றலை துாண்டுகிறது!
மாணவி சனுஷ்கா: 'பட்டம்' இதழ் அனைத்து மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக உள்ளது. வினாடி - வினா எனும் போட்டி அறிவையும், ஆற்றலையும் துாண்டும் வகையில் இருந்தது. 'பட்டம்' இதழ் படிப்பதால், தமிழ் மொழியையும் பிழையின்றி பயில உதவுகிறது. பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது. செய்தித்தாள் வாசிப்பை அதிகரிக்க கைகொடுக்கிறது. மாணவர் ஆஷிப்புல்லா: தொடர்ந்து, 'பட்டம்' இதழ் படித்து வருகிறேன். அதன் வாயிலாக கடந்த காலம் முதல் நடப்பு நாட்கள் வரையிலான அனைத்து தகவல்களை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. 'பட்டம்' இதழில் இடம்பெறும் தகவல்களைத் தெரிந்து கொண்டாலே, போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும். தினமும் வாசிப்பதால் தமிழ் மொழியின் இனிமையை புரிந்து கொள்ளவும் முடிகிறது.