உயர்கல்வி எங்கே படிக்கலாம்... அறிய மாணவியர் களப்பயணம்
கோவை;கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, உயர்கல்வி வழிகாட்டி திட்ட களப்பயண செயல்பாடுகள் நேற்று துவக்கப்பட்டன. கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். முதல்கட்ட பயணத்தில், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் மற்றும் ராஜவீதியில் உள்ள கோவை துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் என, 300 பேர் பங்கேற்றனர். நேற்று, அரசு கலைக்கல்லுாரி மற்றும் கோவைபீளமேடு சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரிக்கு பயணித்தனர். இக்கல்லுாரிகளில், வகுப் பறைகள், விளையாட்டு மைதானங்கள், பிளஸ் 2 முடித்த பின் படிக்கக் கூடிய படிப்புகள், எதிர்காலம் குறித்து, பேராசிரியர்களிடம் ஆலோசித்தனர். உயர் கல்வி நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க வழிமுறைகள், கல்லுாரிகளில் உள்ள இளங்கலை படிப்புகள், உதவித்தொகை திட்டங்கள், போட்டித்தேர்வுகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் குறித்து மாணவர்கள் அறிய இயலும். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உட்பட பலர் பங்கேற்றனர். களப்பயணம், நன்கு திட்டமிட்டு மாணவர்களை உரிய பாதுகாப்புடன், வழிகாட்டி ஆசிரியர்களால் அழைத்துச் சென்று வர, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாடப்பிரிவின் அடிப்படையில், 11,300 பேர், மருத்துவக் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி, சட்டக் கல்லுாரி, பாலிடெக்னிக் ஆகியவற்றுக்கு களப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்களுக்கான செலவினத்தொகை ரூ.5.58 லட்சம், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுவிக்கப்பட்டுள்ளது.