மரக்கன்று வளர்க்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏப்., 1ம் தேதி 'ஏப்ரல் கூல் டே' வாக, அனுசரிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் கவிதாசன் தலைமை வகித்து, மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசியதாவது: இயற்கையை பாதுகாப்பது, பள்ளி மாணவ, மாணவியரின் கடமைகளில் ஒன்று. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் நாள், முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிற வழக்கத்திற்கு பதிலாக, அந்த நாளில் மரக்கன்றுகளை நட வேண்டும். மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டதன் வாயிலாக, 1800 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அதை ஒவ்வொரு மாணவரும் பராமரிக்கும்படி, அறிவுரை வழங்கி வருகிறோம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், நமது பூமியை குளிர்ச்சி மிக்கதாக மாற்றுவோம். இவ்வாறு செயலர் பேசினார். முன்னதாக மாணவ, மாணவிகள், மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிக்க உறுதிமொழி ஏற்றனர்.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.