அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி இல்லை; தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், அன்னுார், சொக்கம்பாளையம், காட்டம்பட்டி, கெம்பநாயக்கன்பாளையம், ஆனையூர் ஆகிய ஐந்து ஊர்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பசூர், பொன்னே கவுண்டன்புதூர், பெரியபுத்தூர் ஆகிய மூன்று ஊர்களில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. பசூர் ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில், பசூர், கம்மாள தொட்டிபாளையம், அ. மேட்டுப்பாளையம், பொங்கலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல நூறு மாணவர்கள் படிக்கின்றனர்.ஆனால் இப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி இல்லை. இதனால் மாணவர்கள் பலர், தனியார் பள்ளிக்கும், ஏழு கி.மீ., தொலைவில் உள்ள அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் செல்ல வேண்டி உள்ளது.இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அ.தி.மு.க., ஐ.டி., அணி நிர்வாகி கிருஷ்ணா, கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்துள்ளார்.