மரக்கன்று நாற்றங்கால் அமைக்க மானியம்
கோவை; கோவை மாவட்டத்தில், மரக்கன்று நாற்றங்கால் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை: மகரந்த சேர்க்கைக்கு சாதகமான சூழலை உருவாக்குதல், கார்பன் - நைட்ரஜன் விகிதத்தை பராமரித்தல், கூடுதல் வருமானம், மண் வளம் காக்க, மண் அரிமானம் தடுக்க, ஈரப்பதம் பராமரிக்க வேளாண் காடுகள் பேருதவி புரிகின்றன. கோவை மாவட்டத்தில், நமது மண்வளம் சீதோஷ்ண நிலை, மழைப்பொழிவுக்கு ஏற்ற நல்ல பணப்பலன் தரக்கூடிய மர வகைகளை, விவசாயிகளின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்து, வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மகாகனி, சந்தனம், செம்மரம், தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளுக்கு, ரூ.16 லட்சத்தில், 2.5 ஏக்கரில் நாற்றங்கால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிழல் வலை அமைத்தல், மிஸ்ட் சேம்பர், தாய் நாற்றங்கால் அமைத்தல், தெளிப்பு நீர் அமைத்தல், வேலி அமைத்தல் போன்றவற்றுக்கு, மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள், வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை அணுகலாம்.