மக்காச்சோள சாகுபடிக்கு மானியம்; பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
கோவை; கோவை மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய, மானியம் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ண வேணி அறிக்கை: கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 611 மி.மீ., மழை அதாவது, 24 உழவு மழை பெறப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை 349 மி.மீ., பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில், 25,953 எக்டர் பரப்பில் தானிய சாகுபடி நடக்கிறது. இதில், மக்காச்சோளம் 3,228 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. கோழித்தீவனம், மாட்டுத் தீவனம், எத்தனால் தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்காக, மக்காச்சோளத்துக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, நம் மாவட்டத்தில் சாகுபடி பரப்பையும் மகசூலையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரங்க ளில், உயர் தொழில்நுட்பங்களைக் கடைப் பிடித்து, 300 எக்டரில் மக்காச்சோள சாகுபடி மேற்கொண்டு, அதிக மகசூல் பெறுவதற்காக, எக்டருக்கு ரூ.6,000 மதிப்பிலான மானியம் வழங்கப்படுகிறது. உயர் மகசூல் தரும் வீரிய ஒட்டு ரக விதைகள் பத்து கிலோ, திரவ உயிர் உரம் அசோஸ்பைரில்லம் அரை லிட்டர், பாஸ்போ பாக்டீரியம் அரை லிட்டர், இயற்கை உரம் 12.5 கிலோ, இலைவழி தெளிக்க நானோ யூரியா அரை லிட்டர் வழங்கப்படுகிறது. எனவே, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, பெ.நா.பாளையம் வட்டார விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகள், வட்டார வேளாண் உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.