டிராக்டர் வாங்க மானியம்; விவசாயிகளுக்கு அழைப்பு
சூலுார்; விவசாயிகள் புதிய டிராக்டர் வாங்க, 5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது, என, சூலுார் வட்டார வேளாண் பொறியியல் துறை அறிவித்துள்ளது.சூலுார் வட்டார வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:வேளாண் பொறியியல் துறை சார்பில் பல மானிய திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. பவர் டில்லர் மற்றும் பவர் வீடர், செல்போன் ஸ்டார்டர் ஆகியவற்றை வாங்க மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், புதிய டிராக்டர் வாங்க, 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ரோட்டவேட்டர் வாங்கவும் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்கவும், பழைய மோட்டாரை மாற்றவும், 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் அளிக்கப்படுகிறது. தரிசு நிலங்களை உழவு செய்ய ஒரு எக்டருக்கு, 7 ஆயிரம் ரூபாய் உழவு மானியம் வழங்கப்படுகிறது. இந்த உபகரணங்கள் தேவைப்படும் விவசாயிகள், வேளாண் பொறியியல் துறை பொறியாளர் வெங்கடாஜலத்தை 92454 65628 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.