| ADDED : நவ 20, 2025 02:15 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக, பொது இடத்தில் மது அருந்துதல், தகராறு செய்தல் மற்றும் பைக் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது. இப்பிரச்னைகளை கண்டறிந்து போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும், பைக் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கிணத்துக்கடவு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும், அதில் குற்றவாளியின் முகம் சரியாக தெரிவதில்லை. இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண சிரமம் ஏற்படுவதுடன் காலதாமதமாகிறது. இது மட்டும் இன்றி, கிராமப்புறங்களில் சிறிய அளவிலான திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் தொழில்நுட்பக் கோளாறால் வேலை செய்வதில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் வாகன பதிவு எண்கள் மற்றும் முகங்கள் தெளிவாக தெரியும் படி, புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.