தொண்டாமுத்தூர்: பேரூர் தாலுகா அலுவலகத்தில், நில சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, தாசில்தார் மற்றும் உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான நிலம், பேரூரில் உள்ளது. இந்த நிலத்துக்கு, நில சொத்து மதிப்பு சான்றிதழ் பெற, பேரூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த சான்றிதழ் கேட்டு, பழனிச்சாமியின் மேனேஜர் ரஞ்சித் குமார், பேரூர் தாசில்தார் ரமேஷ் குமாரை அணுகியுள்ளார். தாசில்தார் ரமேஷ் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பழனிச்சாமி அறிவுரைப்படி, ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி, நேற்று ரஞ்சித்குமார், ரசாயனம் தடவிய, 50 ஆயிரம் ரூபாயுடன், பேரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த தாசில்தார் ரமேஷ்குமார், லஞ்ச பணத்தை, அலுவலக உதவியாளரான சரவணனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்ட சரவணன், தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், தாசில்தார் ரமேஷ்குமார் மற்றும் உதவியாளர் சரவணனை, கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். 50 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். இரவு வரை, தாசில்தார் ரமேஷ்குமார் மற்றும் உதவியாளர் சரவணனிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விசாரணை நடத்தினர்.