கால்வாய்களை துார்வார நடவடிக்கை எடுங்க! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி; 'பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன், கால்வாய்களை துார்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.விவசாயிகள் பேசியதாவது:பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் முடிவடைந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ளது. தற்போது பருவமழையும் கை கொடுப்பதால், தண்ணீர் முறையாக கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.எனவே, பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன், பாசன கால்வாய்களை, வேலை உறுதி திட்டத்தில் துார்வார ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே சாக்கடை கால்வாய் தேங்கி கிடக்கிறது. மழைக்காலங்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து ரோட்டில் செல்வதுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரிய நெகமம் தனியார் தொழிற்சாலைகளுக்கு தனியார் நிறுவனத்தில் இருந்து தண்ணீர் விலைக்கு வாங்குகிறோம் எனக்கூறி, பி.ஏ.பி., கால்வாய் வழியாக கொண்டு செல்ல குழாய் பதிப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்; அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. சின்ன நெகமத்தில், 30 சென்ட் இடம் உள்ளது. அங்கு இருந்து, குடிமங்கலம் ஒன்றியத்துக்கு பைப் லைன் கொண்டு செல்ல சிலர் அனுமதி கேட்டதற்கும்; அனுமதி தரக்கூடாது.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குடோன் ஒன்றை ஒருவர் வாடகைக்கு எடுத்து, உள் வாடகைக்கு விட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலகம், வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான பராமரிப்பில்லாத கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த கட்டடத்தையாவது சரி செய்து தர வேண்டும்.ஆனைமலை பகுதியில் சர்வயேர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், சர்வே பணிகள் மந்தமாக நடக்கிறது.நெல் உலர்களம் அமைக்க அனைத்து ஆவணங்கள் வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.இவ்வாறு, பேசினர்.சப் - கலெக்டர் (பொ) கூறுகையில்,'கால்வாய்கள் துார்வார உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். குடோன் உள்வாடகை விட்டது குறித்து விசாரிக்கப்படும். கூட்டத்துக்கு வராத ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது,'' என்றார்.