மனசு வையுங்க! உரிய நேரத்துக்கு பஸ் இல்லாததால் பாதிப்பு; தாமதமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
பொள்ளாச்சி; 'பஸ் இல்லாததால், சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை; முறையாக பஸ்கள் இயக்க வேண்டும்,' என, பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர், பா.ஜ.,வினர் மனு கொடுத்து வலியுறுத்தினர்.பொள்ளாச்சி அருகே, வீரல்பட்டி ஊராட்சியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பள்ளி படிப்புக்காக தேவனுார்புதுார், கரட்டுமடத்துக்கு சென்று வருகின்றனர்.இங்கு இருந்து செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால், பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாது எனக்கூறி பள்ளி மாணவர்கள், பெற்றோர், பா.ஜ.,வினர், சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். கூடுதல் பஸ் தேவை
பள்ளி மாணவர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து வீரல்பட்டி வழியாக இயங்கி வரும் பஸ், வழித்தட எண், 14/56, கடந்த, இரண்டு மாதங்களாக சரியான நேரத்துக்கு வந்து செல்லாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.வீரல்பட்டிக்கு காலை, 8:30 மணிக்கு வர வேண்டிய பஸ், 8:45 மணிக்கு மேல் வருவதால் சரியான நேரத்துக்கு மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை; காலதாமதம் ஏற்படுகிறது. காலை, மதியம், மாலை என அனைத்து நேரங்களிலும் பஸ் சரியாக வீரல்பட்டிக்கு வருவதில்லை. எனவே, பயணங்களை திட்டமிட்டபடி செல்ல முடியவில்லை.மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கும் போது செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பஸ் முறையான நேரத்துக்கு இயக்க வேண்டும். கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர். ஆட்டோவுக்கு செலவாகுது!
பெற்றோர் கூறியதாவது:வீரல்பட்டியில் இருந்து சரியான நேரத்துக்கு பஸ் இல்லாததால், பள்ளிக்கு மாணவர்கள் ஒரு வகுப்பு முடிந்த பின்னரே செல்லும் நிலை உள்ளது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை முறையாக நேரத்துக்கு அனுப்புமாறு அறிவுறுத்துகின்றனர்.மூன்று கி.மீ., துாரம் நடக்க வைத்து அல்லது வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆட்டோவில் அனுப்ப வேண்டுமென்றால், 100 ரூபாய் செலவாகிறது. தினமும் அன்றாட வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்கிறோம்.இச்சூழலில், ஆட்டோவில் தினமும் அனுப்புவது இயலாத காரியமாகும்.இவ்வழியாக வந்த உடுமலை மப்சல் பஸ்சும் இயக்கப்படுவதில்லை. எனவே, அரசு மனது வைத்து உரிய நேரத்துக்கு பஸ் இயக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
பஸ்சும் இல்லை; ரோடு மோசம்!
பா.ஜ., நகர தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சியில் இருந்து, சமத்துார் - கரட்டுப்பாளையம் - வீரல்பட்டி - புளியம்பட்டி - தேவனுார்புதுார் வழித்தடத்தில், தொண்டாமுத்துார் செல்லாமல், வீரல்பட்டிக்கு நேரடியாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.போதிய பஸ் வசதியில்லாததால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். 47ஏ என்ற நாச்சிப்பாளையம் செல்லும் பஸ், காலை, 4:30 மற்றும், 9:00 மணிக்கும் வீரல்பட்டியில் இருந்து சென்றது. தற்போது அந்த பஸ் இயக்கப்படவில்லை.பஸ் வழித்தட எண், 56; தேவனுார்புதுார், ராவணாபுரம் சென்று மீண்டும் மாமரத்துப்பட்டி வழியாக சுற்றி செல்கிறது. இந்த பஸ், புளியம்பட்டி, வீரல்பட்டி வழியாக மாமரத்துப்பட்டிக்கு சென்று வந்தது. தற்போது இயக்கப்படாததால், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, புளியம்பட்டி, வீரல்பட்டி மற்றும் மாமரத்துப்பட்டி வழியாக டவுன் பஸ், 56; இயக்க வேண்டும். பொள்ளாச்சி கரட்டுப்பாளையத்தில் இருந்து வீரல்பட்டி செல்லும் ரோட்டில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பழுதடைந்த சாலைகளினால் வாகன விபத்துகள் நடக்கின்றன. வீரல்பட்டி - தளவாய்பாளையம் ரோடு மிகவும் பழுதடைந்துள்ளது. கல்குவாரி வாகனங்கள் இந்த ரோட்டில் செல்வதால் சேதமடைகின்றன. எனவே, ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.