தமிழக - கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
கோவை: மாநில எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், 'எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம்' நேற்று கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.கோவை - கேரள எல்லைப்பகுதியில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மற்றும் கேரள எல்லைப்பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.இதில் கோவை எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் பாலக்காடு எஸ்.பி., ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.கூட்டத்தில், இரு மாநில குற்றவாளிகள் தொடர்பான தகவல் பரிமாற்றம், லாட்டரி, விபசாரம், மதுபாட்டில் கடத்தல், கஞ்சா, மண் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் குறித்த தகவல் பரிமாற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாக கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை கண்காணிக்கவும், பாதுகாப்பு பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வி.ஐ.பி., போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க இரு மாநில போலீசாரின் ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.