உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் கேம், டிவிக்கு டாட்டா...

மொபைல் கேம், டிவிக்கு டாட்டா...

பொள்ளாச்சி;மொபைல்போனுக்கு விடை கொடுத்து, மரபுவிளையாட்டுகளில் பெத்தநாயக்கனுார் அரசுப்பள்ளி மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். புழுதி மண்ணிலும், வெயிலிலும், மழையிலும் நனைந்தபடியே சக நண்பர்களோடு விளையாடினர்.நாகரிக உலகில், 'பாஸ்ட்புட்' உணவுகளை அதிகம் உட்கொள்வது, மொபைல்போன்களில் கேம் விளையாடுவதும், வீடியோக்கள் பார்ப்பதும் தற்போது பேஷனாகி விட்டது.அதிக நேரம் மொபைல்போனில் விளையாடுவது, பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்ணாடி அணியும் நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றனர். படிப்பிலும் கவனமின்றி இருக்கின்றனர்.ஓடி, ஆடி விளையாடாமல், நொறுக்குத்தீனிகளை உண்டு, மொபைல்போனில் மூழ்குவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நோய் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவ செலவே அதிகரிக்கிறது.மொபைல்போனுக்கு விடை கொடுத்து, மாணவர்களை விளையாடி மகிழவைக்க பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனுார் அரசுப்பள்ளியில் மரபு விளையாட்டு என்ற பெயரில், போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.பள்ளியின் நுழைவுவாயிலில் மாணவர்கள் வரைந்த கோலம், தோரணங்கள் வரவேற்கின்றன. ஒவ்வொரு மாணவரும் பிடித்த விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.கண்ணாமுச்சி, நொண்டி, நுங்கு வண்டி, டயர் ஓட்டுதல், கயிறாட்டம், தாயம், பச்ச குதிர, பல்லாங்குழி, கபடி, பாம்பே மிட்டாய், பறை, கரகம், தேவராட்டம், கம்பத்தாட்டம், ஒயிலாட்டம்,கும்மியாட்டம் விளையாடி மாணவர்கள் மகிழ்ந்தனர். பாம்பே மிட்டாய்களை வாங்கி குட்டீஸ் சுவைத்து மகிழ்ந்தனர்.ஒவ்வொரு விளையாட்டையும் மாணவர்கள் ஆர்வமாக விளையாடியதை கண்ட பெற்றோர், பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். தமிழ் ஆசிரியர் பாலமுருகன், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:முந்தைய காலத்தில் குழுவாக இணைந்து விளையாடி மாணவர்கள் மகிழ்ந்தனர். இதனால், அவர்களது அறிவு, சிந்திக்கும் திறன், குழு செயல்பாடு அதிகமாக இருந்தது.தற்போது, மொபைல்போன் கேம், 'டிவி'க்கு அடிமையாகும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.எனவே, குழந்தைகள், மொபைல்போனுக்கு அடிமையாகாமல் இருக்கும் வகையில், மரபு விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிறது.ஆண்டுதோறும் மரபு விளையாட்டு விழா நடத்தப்படுகிறது. மாணவர்களும் பிடித்த விளையாட்டை மகிழ்வுடன் ஆர்வமாக விளையாடுகின்றனர். மாணவர்கள், உடல், மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பதை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.கல்வியோடு, உடல், மனம், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நல்ல பண்புகள், ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ