டாக்ஸியில் தவறவிட்ட நகை, பணம் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு
கோவை; பெண் ஒருவர் டாக்ஸியில் தவறவிட்டு சென்ற, தங்க நகைகள் மற்றும் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த டாக்ஸி டிரைவரை, மாநகர கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டினார். கரூரை சேர்ந்த பாலமுருகனின் மனைவி மதுமிதா, கோவையில் இருந்து கரூர் செல்ல கால் டாக்ஸி புக் செய்திருந்தார். அவரை, சம்பத் குமார் என்பவர் டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். பாதி வழியில் மதுமிதா தனிப்பட்ட காரணங்களுக்காக, காரில் இருந்து இறங்கி சென்றார். சம்பத்குமார் வேறு ஒரு சவாரி கிடைத்து, ஈரோடு புறப்பட்டு சென்றார். இதனிடையில், மதுமிதா தனது 10 சவரன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் பணத்தை காணவில்லை என, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு சென்றிருந்த சம்பத் குமார், கோவை திரும்பியவுடன் காரில் பெண் தவற விட்டு சென்றதாக நகை, பணத்தை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் சம்பத்குமாரை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். நகை மற்றும் பணம் மதுமிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.