இரு மாத சம்பளத்துக்காக காத்திருப்பு மாநகராட்சி தற்காலிக ஆசிரியர்கள் அவதி
கோவை,; கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 83 ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலை, 11 உயர்நிலை, 17 மேல்நிலை என, 148 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர் காலிப்பணியிடங்களானது, பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக(எஸ்.எம்.சி.,) நியமிக்கப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ், பொருளியல், கணினி பயன்பாடு உள்ளிட்ட பாடங்களுக்கு, 47 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். 34 நடுநிலை பள்ளிகளில், 51 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு மாதம் ரூ.18 ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆரம்ப, நடுநிலை என, 52 பள்ளிகளில், இடைநிலை, தலைமை ஆசிரியர்கள், 62 பேர் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பூதியத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து இவர்களுக்கு, மாத சம்பளம் வழங்கப்படுகிறது. தற்காலிக ஆசிரியர்கள் கூறுகையில், 'ஜூன், ஜூலை என இரு மாதங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால், பொருளாதார ரீதியான சிரமங்களை சந்திக்கிறோம். உடனடியாக எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்' என்றனர். மாநகராட்சி கல்வி பிரிவினர் கூறுகையில், 'தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டது' என்றனர். சில பள்ளிகளில் ரொக்கமாகவும், சில பள்ளிகளில் காசோலையாகவும் சம்பளம் வழங்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதில் இருக்கும் சிக்கல்களை நிவர்த்தி செய்வதுடன், மாதம்தோறும், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.