உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடியடி காக்கிக்கு செடிகொடி மீது காதல்! லட்சியம் பேசும் லட்சம் மரக்கன்றுகள்

தடியடி காக்கிக்கு செடிகொடி மீது காதல்! லட்சியம் பேசும் லட்சம் மரக்கன்றுகள்

மதுரையைச் சேர்ந்தவர் அய்யர்சாமி; மதுரை காவல் பயிற்சி பள்ளியில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றுகிறார். இவர் இதற்கு முன் கோவை ஆயுதப்படையில் பணியாற்றியபோது ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்த்து பள்ளி, கல்லுாரிகளுக்கு வழங்கினார். இந்த கன்றுகள் பள்ளி, கல்லுாரி வளாகங்கள், பொது இடங்களில் நடப்பட்டு பசுமை வளாகங்களாக மாறியுள்ளன. இங்கிருந்து மாற்றலாகி, கரூருக்கு சென்று அங்கும் மரக்கன்றுகளை நட்டு, சூழல் பணிகளில் ஆர்வம் காட்டி போலீஸ் துறையில் முன்னுதாரணமாக திகழ்ந்தார். தற்போது மதுரையிலும் இதே பணியினைத் தொடர்கிறார்.டி.எஸ்.பி., அய்யர்சாமி கூறியதாவது:போலீஸ் பணியில் சேர்ந்து 40 ஆண்டுகளாகிறது. கோவையில் 33 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். இயற்கை, சூழல் மீது எமக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. போலீஸ் பணியை தவிர்த்து இந்த சமூகத்திற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டுமென்ற வேட்கை என்னுள் ஏற்பட்டது. அதன் விளைவே பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் முயற்சி. அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்து சென்றோம் என்பது முக்கியமல்ல; அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சூழலை எவ்வாறு விட்டுச் செல்கிறோம் என்பதே முக்கியம்.அதற்காக மனதில் உதித்தது சிறுபொறி. வறண்ட பகுதிகளை பசுமையாக்க முடிவு செய்தேன். அதற்கான பணியினை போலீஸ் வளாகங்களிலேயே துவக்கினேன். ஒரு லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கினேன். கோவையில் போலீஸ் வளாகங்கள், அரசு நிலங்களில், 18 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு உள்ளேன். கொரோனா காலகட்டத்தில் கரூரில் பணிபுரிந்தேன். அங்கு, 7036 மரக்கன்றுகளை நட்டேன்.பொதுமக்கள் ஆரோக்கியமான சுவாசக்காற்றைப் பெற, நடைபயிற்சி செல்லும் இடத்தில் மூலிகை செடிகளை நட்டுள்ளேன். தற்போது பணிபுரிந்து வரும் மதுரையில், 10,125 மரக்கன்று நட்டுள்ளேன். அனைத்து இடங்களிலும் சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடப்பட்ட மரக்கன்றுகள் நாவல், மாமரம், நெல்லி, சப்போட்டா உள்ளிட்ட குறிப்பிட்ட 15 வகை மரங்களாகும்.விடுமுறை நாட்கள் மற்றும் நேரம் கிடைக்கும்போது மரக்கன்று நட்ட இடங்களை பார்வையிட்டு பரவசம் அடைவேன். இது மட்டுமின்றி, 36 குழந்தைகள் காப்பகங்களுக்கு தேவையான உதவிகள், 20 குழந்தைகளின் கல்வி போன்றவற்றுக்கு தோள் கொடுத்து வருகிறேன். இதுவே மகிழ்ச்சி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை