உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கவில்லை; திட்டமே நின்னு போச்சு! நகருக்குள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்... 3 ஆண்டாக முடிவெடுக்காமல் அரசு இழுத்தடிப்பு!

பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கவில்லை; திட்டமே நின்னு போச்சு! நகருக்குள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்... 3 ஆண்டாக முடிவெடுக்காமல் அரசு இழுத்தடிப்பு!

-நமது நிருபர்-கோவை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை செயல்படுத்தாமல், தமிழக அரசு மூன்றாண்டுகளாக இழுத்தடித்து வருகிறது.கோவை நகரில், காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், விரைவு பேருந்துக் கழக பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், உக்கடம், சிங்காநல்லுார் மற்றும் சாய்பாபா கோவில் பஸ் ஸ்டாண்ட் என, ஏழு பஸ் ஸ்டாண்ட்கள் இயங்கி வருகின்றன. மற்ற பெரிய நகரங்கள் எதிலும், இத்தனை பஸ் ஸ்டாண்ட்கள் இல்லை. சென்னையில் பஸ்கள் அதிகரிப்பால் கோயம்பேடு மூடப்பட்டு, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே, ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பெரியளவில் கட்டப்பட்டு, அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.திருச்சி, சேலம், திருநெல்வேலி என எல்லா நகரங்களிலும், ஒன்று அல்லது இரண்டு பஸ் ஸ்டாண்ட்கள்தான் உள்ளன.ஆனால் கோவை நகரில், சின்னச்சின்ன பஸ் ஸ்டாண்ட்களாக ஏழு பஸ் ஸ்டாண்ட்கள் திசைக்கு இரண்டாகவுள்ளன.

பார்க்குமிடமெல்லாம் ஆம்னி பஸ்

அதிலும், தற்போது வலம் வரும் ஆம்னி பஸ்களில், நான்கில் ஒரு பங்கு பஸ்கள் நிற்கக்கூட இடமில்லாத அளவில் தான், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இதனால் நகரின் பல பகுதிகளிலும், ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.குறிப்பாக, காந்திபுரம் பகுதியில் பல்வேறு இடங்களிலும் ஆம்னி பஸ்கள் அடைத்து நிறுத்தப்படுவதால், இரவு நேரங்களில் மற்ற வாகனங்கள் செல்லவே முடியாத நிலை ஏற்படுகிறது.காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லுார் பகுதிகளிலும் பஸ் ஸ்டாண்ட்களால், அந்தப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்காகவே வெள்ளலுார் பகுதியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசின் உதவியுடன் பஸ் போர்ட் அமைக்க திட்டமிடப்பட்டது.அது நிராகரிக்கப்பட்டதால், அதே இடத்தில் 61.62 ஏக்கர் பரப்பளவில், ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியது. தமிழக அரசும், மாநகராட்சியும் தலா 50 சதவீத நிதியில், இந்த பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்காததால், கோவை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பஸ் பே, காம்பவுண்ட் சுவர் போன்றவை கட்டப்பட்டன.

வரிப்பணம் ரூ.30 கோடி வீண்

கடந்த 2021ல் ஆட்சி மாறிய பின் நிறுத்தப்பட்ட பணி, இப்போது வரை துவக்கப்படவில்லை. மக்களின் வரிப்பணம் 30 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட கட்டடம், வீணாகி வருகிறது. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டை, அதே இடத்தில் கட்ட வேண்டுமென்று, கோவை தெற்குப்பகுதி வளர்ச்சிக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.ஆனால் நீலாம்பூர் பகுதிக்கு இது மாற்றப்படவுள்ளதாக, மற்றொரு தரப்பில் தகவல் பரவியுள்ளது. ஆனால் அரசு இதில் எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டாகியும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.வெள்ளலுார் பஸ் ஸ்டாண்டை முழுமையாகக் கட்டி, அணுகுசாலைகளை அமைத்து, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்; அல்லது வேறிடத்தில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டை அமைத்து, ஏழு பஸ் ஸ்டாண்ட்களையும் இடம் மாற்ற வேண்டும். இரண்டையும் செய்யாமல் இழுத்தடித்து வருவதால், நகருக்குள் பஸ்கள் எண்ணிக்கை பெருகி, போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.நகர வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப செயல்படாமல், ஆண்டுக்கணக்கில் ஒரு திட்டத்தைக் கிடப்பில் போட்டிருப்பது, தமிழக அரசின் செயலற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல் நகரின் நலனை, மக்களின் தேவையை உணர்ந்து அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ