ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதரை அகற்றம் செய்யணும்!
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள புதரை அகற்றம் செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாசில்தார் அலுவலகம், சுய உதவி குழு, வேளாண், ஒன்றியம், சமூக நலத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதனால், தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.இங்கு முறையான 'பார்க்கிங்' வசதி இல்லாததால், தாலுகா அலுவலகத்தில் இருந்து ஒன்றிய அலுவலகம் செல்லும் மண் பாதையில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. சிறப்பு முகாம்கள், ஜமாபந்தி, ஒன்றிய அலுவலக சிறப்பு கூட்டங்கள் உள்ளிட்டவைகள் நடக்கும் போது, வாகன 'பார்க்கிங்'கால் இடையூறு ஏற்படுகிறது.மண்பாதை அருகே உள்ள காலி இடத்தில், அதிகளவு செடி, கொடிகள் படர்ந்து புதர் போல் உள்ளது. புதரை அகற்றும்பட்சத்தில், 'பார்க்கிங்' ஏரியாவாக பயன்படுத்த முடியும். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது இங்கு ஆய்வுக்கு வரும் போது, கட்டடத்தின் முன்பாக, வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய வசதியாக இருக்கும்.இது மட்டுமின்றி, சிறப்பு முகாம்கள் நடக்கும் நாட்களில் பொதுமக்களுக்கும் இந்த இடத்தில் 'பார்க்கிங்' ஒதுக்கலாம். எனவே, இந்த இடத்தை தூய்மை செய்து, 'பார்க்கிங்' அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.