உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவரை கடத்திய கார் கவிழ்ந்து விபத்து

மாணவரை கடத்திய கார் கவிழ்ந்து விபத்து

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கல்லுாரி மாணவனை கும்பல், காரில் கடத்திச் சென்ற போது, கார் கவிழ்ந்ததால் போலீசில் சிக்கினர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள எல்.எம்.டபிள்யூ., பிரிவில் வசிப்பவர் அருண்குமார், 19. தனியார் கல்லூரியில் படிக்கிறார். இவர் தனது நண்பர் பாலகிருஷ்ணன்,19, உடன் கோவனுார் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றார்.அங்கு நின்று கொண்டிருந்த ஆகாஷ், 20, தினேஷ், 20, ஜெயபிரகாஷ்,19, சந்தோஷ், 24, ஆகியோர் அருண்குமாரை பார்த்து ஆபாச சைகை செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆகாஷ் தரப்பினருக்கு ஆதரவாக கார்த்திக் ராஜ்,27, விவேக்,26, காரில் வந்தனர். ஆத்திரமடைந்த ஆகாஷ் தரப்பினர், பாலகிருஷ்ணனை தள்ளிவிட்டு, அருண்குமாரை காரில் துாக்கிப்போட்டு கடத்திச் சென்றனர். பாலகிருஷ்ணன் அங்கு இருந்த பொதுமக்களின் உதவியோடு இருசக்கர வாகனத்தில் காரை துரத்தி சென்றார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் ரோட்டில் சென்ற போது, காரின் டயர் வெடித்து, கார் தலை குப்புற கவிழ்ந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், மாணவனை கடத்திச் சென்ற ஜெயபிரகாஷ், ஆகாஷ், கார்திக்ராஜா, விவேக், தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய சந்தோஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ