வரிச்சுமையை குறைத்த மத்திய அரசு; சூலுார் வியாபாரிகள் சங்கம் பாராட்டு
கோவை; வரிச்சுமையை குறைக்கும் வகையில், ஜி.எஸ்.டி.யை இரண்டு அடுக்கு முறையாக, மத்திய அரசு குறைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக, சூலுார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சூலுார் வியாபாரிகள் அறக்கட்டளை மற்றும் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. சூலுார் பிரிவு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்து, கூட்டத்தை துவக்கி வைத்தார். கூட்டத்தில், ஜி.எஸ்.டி.குறைப்பால் மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளதால், மத்திய அரசுக்கு முதல் தீர்மானமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி அதிகரிப்புக்கு, கண்டனம் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்ததற்கு பதிலடியாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அமெரிக்கப் பொருட்களை விற்கவோ, பயன்படுத்தவோ மாட்டோம் என வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சூலுார் பகுதியில் செமி கண்டக்டர் தொழில் வளர்ச்சிக்கு திட்டம் போட்டு செயல்படுத்த உள்ள மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு பாராட்டுவது உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், செயலாளர் முருகேசன், துணை தலைவர்கள் செல்வராஜ், இளங்கோவன், தங்கராஜ், சசிகுமார், பொருளாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.