சவுகாட் ஆரஞ்சு ரகம் இளநீருக்கு சிறப்பானது! தொழில்நுட்ப பயிற்சியில் தகவல்
ஆனைமலை; ஆனைமலை அருகே, தென்னை விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக -அகில இந்திய ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா, ஆனைமலை அருகே குள்ளேகவுண்டனுாரில் நடந்தது.தென்னை ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சுதாலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், 'தென்னைக்கு மண் பரிசோதனையின் அவசியத்தையும், மண் பரிசோதனை அடிப்படையில் மரங்களுக்கு உரமிடுதல் குறித்து விளக்கியதுடன், தென்னை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு ஆற்றி வரும் சேவைகள் குறித்து விளக்கினார்.பேராசிரியர் (தோட்டக்கலை) முனைவர் ராஜலிங்கம் பேசுகையில், ''தென்னையில் மேம்பட்ட ரகங்களில் ஒன்றான சவுகாட் ஆரஞ்சு குட்டையானது இளநீருக்கு சிறப்பு வாய்ந்ததாக மற்றும் விவசாயிகளுக்கு லாபகரமான ரகமாக இருக்கும்,'' என்றார்.பேராசிரியர் (உழவியல்) முனைவர் தவபிரகாஷ் தென்னையில் உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்தும், இணைப்பேராசிரியர் (பயிர் நோயியல்) முனைவர் மீனா, தென்னையில் தோன்றும் நோய்களில் இலைக்கருகல் மற்றும் வேர் வாடல் நோய் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கினர்.இணைப்பேராசிரியர் (வேளாண் பூச்சியியல்) முனைவர் அருள்பிரகாஷ், தென்னையை தாக்கும் பூச்சிகள், சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாடு பற்றி கூறினார். முன்னோடி விவசாயி லோகநாதன் பேசினார்.இதில், பங்கேற்ற பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், மண் புழு உரம், பேசில்லஸ், டிரைக்கோடெர்மா மற்றும் தென்னை டானிக் போன்ற இடுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் செய்திருந்தனர்.