உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மாணவர்களுடன் உரையாடிய கலெக்டர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மாணவர்களுடன் உரையாடிய கலெக்டர்

கோவை,: 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், சிங்காநல்லுார் உழவர் சந்தையில் கலெக்டர் கிராந்திகுமார் நேற்று ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலந்துரையாடினார். பின், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவ - மாணவியரிடம் காலை சிற்றுண்டி திட்டத்தின் பயனை கேட்டறிந்தார்.கோவை மாநகராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளில், கலெக்டர் கிராந்திகுமார் நேற்றும், நேற்று முன்தினமும் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வேகத்தடை அமைப்பதை பார்வையிட்ட கலெக்டர், புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று, சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.பின், 64வது வார்டு ராமநாதபுரம் சந்திப்பில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியை பார்வையிட்ட கலெக்டர், மாநகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு சென்று, 'மகிழ் முற்றம்' அமைப்பை துவக்கி வைத்து, மாணவ - மாணவியருக்கு கையேடு வழங்கினார். 51வது வார்டில் செயல்படும் அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற அவர், குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவு வகைகளை சாப்பிட்டு, தரத்தை பரிசோதித்து பார்த்தார்.குழந்தைகளின் வயதுக்கேற்ற எடை, உயரம் இருக்கிறதா என்பதை அளவீடு செய்து பார்த்தார். தடாகம் ரோட்டில் உள்ள வாழைக்காய் மண்டிக்கு சென்ற கலெக்டர், ஏலத்துக்கு கொண்டு வந்திருந்த வாழைக்காய் தார்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.நேற்றைய தினம் சிங்காநல்லுார் உழவர் சந்தைக்கு சென்ற கலெக்டர், எந்தெந்த கிராமங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன; பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருகை; வர்த்தகம் எவ்வாறு நடக்கிறது மற்றும் விலை நிலவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.பின், கள்ளிமடை மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு சென்ற அவர், காலை சிற்றுண்டி திட்டத்தில் பயன்பெறும் மாணவ - மாணவியருடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார். அம்மாணவர்களுடன் பேசி, சிரித்துக் கொண்டே, திட்டத்தின் பயனை கேட்டறிந்தார்.

'இரு வாரங்களில் தீர்வு'

கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ''பல்வேறு துறைகளின் பிரச்னைகளை அடையாளம் கண்டிருக்கிறோம். மாவட்ட அளவிலான கோரிக்கைக்கு இரு வாரங்களில் தீர்வு காணப்படும். நீண்ட கால பிரச்னை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு ஏற்படுத்தப்படும். மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. குனியமுத்துார் பகுதியில் இருந்து வாகன போக்குவரத்தை வேறு வழித்தடத்தில் மாற்றி விட்டு குழாய் பதிக்க ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை