| ADDED : மார் 20, 2024 12:48 AM
கோவை;''தேர்தல் விதிகளின் படி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதியை மாற்றி, இரண்டு லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்ல விதிகளில் திருத்தம் செய்யவேண்டும்,'' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சாயிபாபா காலனியில் உள்ள ஜே.கே., ஓட்டல் அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் இருதயராஜா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கோவையில் பல ஆயிரம் வணிகர்கள் உள்ளனர். லோக்சபா தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்களும், வணிகர்களும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதியை மாற்றி, இரண்டு லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்ல விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும்.வணிகர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டால் , தேர்தல் முடியும் வரை வைத்துக் கொள்ளாமல், உடனே விசாரணை செய்து பணத்தை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மண்டல தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், பொருளாளர் வஹாப் உள்ளிட்ட பல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.