மாணவர்களின் லட்சிய கனவுகளை நனவாக்க சிறப்பு பயிற்சி அளிக்கப் போகுது மாநகராட்சி
கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு, அவர்களது எதிர்கால லட்சிய கனவுகளை நனவாக்கும் வகையில், துறை வாரியாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாநகராட்சி பள்ளி மாணவர்களை வழிநடத்தி, நல்லறிவு, திறமை, பண்பாடு, நற்பண்புகள் கற்பித்து, சமுதாயத்துக்கு சிறந்த பங்களிப்பு செய்யும் வகையில், கல்வி திட்டம் உருவாக்கியுள்ளோம். தொழிற்சாலைகளை பார்வையிடுதல், அறிவியல் கண்காட்சி நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், வாசிப்பு திறனை மேம்படுத்துதல், வினாடி-வினா போட்டிகள் நடத்துதல், வி.ஆர்., ஆய்வகங்கள் உருவாக்குதல், செஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சியளிக்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இன்ஜி., மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், ஆடிட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில், எந்த துறையில் வல்லுனராக மாணவ, மாணவியர் விரும்புகிறார்களோ அத்துறையை பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில், மாணவப் பருவத்திலேயே பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''மாணவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, வெற்றிக்கான இலக்கை காட்ட உள்ளோம். அவர்கள் விரும்பும் துறையில் எவ்வாறு சாதிக்கலாம், அதற்கான வழிகள் என்ன என்பதை கற்றுத்தர உள்ளோம்.''தனியார் அமைப்பு ஒன்று, ஆதிதிராவிடர் பள்ளியில் பயிற்சி அளித்துள்ளது; நல்ல பலனை தந்திருக்கிறது. மாநகராட்சி பள்ளியிலும் செயல்படுத்த உள்ளோம்,'' என்றார்.
பாதுகாப்பு வீதிகள்'
கமிஷனர் கூறுகையில், ''ராமநாதபுரத்தில், 2.5 கி.மீ., நீளமுள்ள திருச்சி ரோடு மற்றும் காமராஜர் சாலைக்கு தெரு மேம்பாட்டு திட்டம் தயாரித்துள்ளோம். அதில், ஒன்பது பள்ளிகளை ஒருங்கிணைக்க உள்ளோம். பாதுகாப்பான நடைபாதை, பிரத்யேகமாக பாதசாரிகள் கடக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும். மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாப்பாக வந்து செல்ல, தேவையான அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்படும்,'' என்றார்.