புது டெண்டர் கோருவதில் மாநகராட்சி அலட்சியம்! பழைய ஒப்பந்ததாரர்களுக்கே நீட்டிக்கும் மர்மம்
கோவை : கோவையில் குப்பை அள்ளும் பணி, பொதுக்கழிப்பிடம் மற்றும் பூங்கா பராமரிக்கும் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. புதிதாக ஒப்பந்தம் கோராமல், மாநகராட்சி பொறியியல் பிரிவினர் தாமதித்து உள்ளனர். தற்போது, புதிய டெண்டர் கோரும் வரை, பழைய ஒப்பந்த நிறுவனங்களே பராமரிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.கோவை மாநகராட்சி பகுதியில், 53 ஆயிரத்து, 521 எல்.இ.டி., தெருவிளக்குகள் உள்ளன. இவற்றை பராமரிக்கும் ஒப்பந்த காலம், இம்மாதத்துடன் முடிகிறது. ஒரே நிறுவனத்திடம் பராமரிக்கும் பொறுப்பை வழங்கினால், பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கருதுகின்றனர். அதனால், மண்டலம் வாரியாக பிரித்து, ஐந்து டெண்டர்களாக கோர முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கென, 7.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரிடம் நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி பெற கருத்துரு அனுப்பவும், இரு ஆண்டுகள் இயக்கி, பராமரிக்கும் பணியை பொதுநிதியில் மேற்கொள்ளவும் மன்றத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.அதே நேரம், டெண்டர் கோரி, மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெறும் வரை, பழைய ஒப்பந்த நிறுவனங்கள் மூலமே, ஏற்கனவே அனுமதித்த விலை விகிதத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. பொதுக்கழிப்பிடம்
மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் சமுதாய கூடங்களை பராமரிக்க, ரூ.3.05 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றை பராமரிக்கும் நிறுவனங்களின் டெண்டர் காலம், அக்., 31ல் முடிந்து விட்டது.அதற்கு முன்னதாகவே, புதிதாக டெண்டர் கோரியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், புதிய நிறுவனம் தேர்வு செய்யும் வரை பழைய ஒப்பந்த நிறுவனமே பராமரிப்பு பணி தொடர, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.இதேபோல், பூங்காக்களை பராமரிக்கும் பொறுப்புக்கும் டெண்டர் கோரி, புதிய நிறுவனங்கள் தேர்வு செய்யும் வரை, பழைய ஒப்பந்த நிறுவனங்களே தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இரவு காவலர்கள்
மாநகராட்சி பள்ளிகளுக்கு இரவு காவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களின் ஒப்பந்தமும் அக்., 31ல் முடிந்து விட்டது. இரண்டு மாதங்களாகியும் புதிதாக டெண்டர் கோராமல், புதிய டெண்டர் இறுதி செய்யும் வரை, பழைய ஒப்பந்த நிறுவனத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு, ஒரு கோடியே, 39 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டு உள்ளது.குப்பை அள்ளும் பணி செய்து வரும், ஒப்பந்த நிறுவனத்தின் காலம், ஆக., 17ல் முடிந்தது; புதிய டெண்டர் கோருவதற்காக மூன்று மாதங்கள் அவகாசம் அளித்து, பழைய ஒப்பந்த நிறுவனத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் அவகாசம், நவ., 17ல் முடிந்தது; இன்னும் புதிய டெண்டர் கோரவில்லை. இப்போது, மேலும் இரு மாதங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது, மாநகராட்சி வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒப்பந்த காலம் முடிவதற்குள் புதிய டெண்டர் கோர வேண்டியது. இது, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் வேலை.அவர்கள், தங்களது கடமையை செய்யத் தவறியதால், மீண்டும் பழைய நிறுவனத்தினருக்கே ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. வேலையில் கவனமின்றி, அலட்சியமாக செயல்பட்ட, பொறியியல் பிரிவினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
'டெண்டர் கோரப்போகிறோம்'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''குப்பை அள்ளும் பணிக்கு மூன்று மாதங்கள் அவகாசம் பெறப்பட்டது. டெண்டர் கோரப்பட்டு விட்டது; இறுதி செய்ய, இரு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.பூங்காக்கள் பராமரிக்கும் பொறுப்பை, மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வழங்க முடிவு செய்திருந்தோம்; அவர்கள் வேண்டாம் என கூறி விட்டனர். அதனால், அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. புதிய டெண்டர் கோரி விடுவோம்,'' என்றார்.