பொள்ளாச்சி: 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், ஆனைமலை தாலுகாவில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் முகாமிட்டு கள ஆய்வு செய்தார்.தமிழக அரசு, 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் தாலுகா அளவில் தங்கி, கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.அதன்படி, கோவை மாவட்டத்தில், ஆனைமலை பி.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று காலை, 8:45 மணிக்கு, கோவை கலெக்டர் கிராந்திகுமார், அனைத்துறை அலுவலர்களுடன் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.அதன்பின், தாசில்தார் அலுவலக இ-சேவை மையம், மாற்றுத்திறனாளிகள் பள்ளி, அண்ணா நகர் அங்கன்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, குழந்தைகள் மற்றும் ஊழியர்களிடம் உரையாடி, குறைகளைக் கேட்டறிந்தார்.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, நோயாளிகளின் வருகை, மருந்துகளின் இருப்பு, கட்டமைப்பு வசதிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் மையங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், ரேஷன்கடை, அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்தார்.மாராப்பகவுண்டன்புதுாரில் அரசின் திட்டப்பணிகள், சாலை மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். மாலையில், பி.டி.ஓ., அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு துறை முதன்மை அதிகாரிகளுடன் முகாமிட்டு, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 19 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களிடம் இருந்து, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.குறிப்பாக, அனைத்து ஊராட்சிகளிலும் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்க கோரி அதிகளவில் மனுக்கள் இடம்பெற்றிருந்தன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:இத்திட்டத்தில், அரசு துறை சார்ந்த அலுவலகங்கள், பள்ளிகளுக்கு தேவையான வசதிகள், மக்களின் குறைகள் கேட்டறியப்படுகிறது. தீர்க்கக் கூடிய பிரச்னைகளுக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.ஏதேனும் வளர்ச்சிப் பணிக்கு நிதி தேவைப்பட்டால், 2024-25ம் நிதியாண்டு திட்டம் தயாரிக்கும் போது, முன்னுரிமை அளிக்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்கள், 'முதல்வரின் முகவரி' என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும்.ஆனைமலை தாலுகாவில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதனால், தேங்காய் உற்பத்தி மட்டுமின்றி தொழில்நுட்பத்துடன் கூடிய மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.