உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீரவில்லை வேட்டையன் யானையின் ஆட்டம்; தாளியூர் பகுதிகளில் தென்னை மரங்கள் சேதம்

தீரவில்லை வேட்டையன் யானையின் ஆட்டம்; தாளியூர் பகுதிகளில் தென்னை மரங்கள் சேதம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள தடாகம் தண்ணீர் பந்தல், தாளியூர், கோவனூர் பகுதிகளில் ஒற்றை யானையான வேட்டையன் வேளாண் நிலங்களில் இருந்த தென்னை மரங்களை முறித்து வீசியது.பெரியநாயக்கன்பாளையம், சின்னதடாகம் வட்டாரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, வேட்டையன் என்ற ஒற்றை யானை வீடுகளில் புகுந்து ரேஷன் அரிசி, உப்பு, காய்கறிகளை தின்று வருகிறது.வேட்டையன் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பெரியநாயக்கன்பாளையம் மற்றும் கோவை வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனாலும், வேட்டையினால் ஏற்படும் சேதத்தை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. அந்த யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் துடியலூர் சின்ன தடாகம் ரோட்டில் தாளியூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது,கோவை மாவட்ட நிர்வாகம், வேட்டையன் யானையை இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான கடிதம் சென்னையில் உள்ள முதன்மை வன பாதுகாவலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.மேலும், கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்தி வேட்டையன் யானையை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஆனைமலை பகுதியில் இருந்து கும்கி யானைகள் ஆன முத்து, சுயம்பு ஆகியவை கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. ஆனால், சில நாட்களில் கும்கி யானைகளின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால், அவை மீண்டும் ஆனைமலை கொண்டு செல்லப்பட்டன. தற்போது, ஏற்கனவே சின்ன தடாகம் வட்டாரத்தில் சுற்றித்திரிந்து, கும்கியாக மாற்றப்பட்ட சின்னத்தம்பி யானை சின்னதடாகம் அருகே வரப்பாளையத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வேட்டையன் யானையின் செய்கைகளை கட்டுப்படுத்த இயலவில்லை. கடந்த இரண்டு நாட்களாக,தாளியூரில் உள்ள விவசாயி மயூரி மலர்விழி தோட்டத்தில் புகுந்து தென்னங்கன்றுகளை மிதித்து அழித்தது. இதே போல பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூரில் சுந்தரப்ப கவுண்டர் தோட்டத்தில் தென்னங்கன்றுகளை அழித்தது. தடாகம் தண்ணீர் பந்தல் தோட்டத்திலும் தென்னை மரங்களை அழித்தது. தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களை அடுத்து வேட்டையன் யானையை உடனடியாக இடம் மாற்றம் செய்ய கோவை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !