| ADDED : நவ 27, 2025 02:38 AM
கோவையில் இன்று உப்பிலிபாளையம் என்று அழைக்கப்படும் இரண்டு பகுதிகள், உண்மையில் பழமையான, 'உப்பிலியர்பாளையம்' என்பதிலிருந்து மருவியவை. இங்கு ஒரு காலத்தில் உப்பிலியர் எனப்படும், திராவிட சமூகத்தவர் வாழ்ந்தனர். கடல் உப்பு இல்லாத காலத்தில், உவர் மண் கொண்டு உப்பைத் தயாரித்ததும், கிணறு தோண்ட, கல் பிளக்க பயன்படும் வெடி உப்பு தயாரித்ததும் இவர்களே. மன்னராட்சிக் காலத்தில், பல கோட்டைகள் கட்டும் பணியிலும் முக்கிய பங்கு வகித்தனர். பல கோட்டை கட்டுமானங்களில், இவர்களின் கைவண்ணம் இருந்தது. இவர்களின் வெடி உப்பு அயல்நாடுகளுக்கும் சென்றதால், அந்தக் காலத்தில் அவர்கள் செல்வந்தர்களாக இருந்தனர். இந்த வளர்ச்சி, ஆங்கிலேயர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, 1889ம் ஆண்டு உப்புத் தயாரிப்பைத் தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர வைத்தது. இதனால் உப்பிலியர் சமூகத்தின் பழைய தொழில் சரிந்தது. பின்னர் அவர்கள் தொழிலை மாற்றிக் கொண்டனர். அவர்கள் குடியேறி வாழ்ந்த கோவையில், இரண்டு பாளையங்கள் உருவாயின. உப்பிலியர் வசித்த அந்த பகுதியின் பெயர்கள் காலப்போக்கில், 'உப்பிலிபாளையம்' ஆக மாறினாலும், அவற்றின் பின்னால் ஒரு பழமையான சமூகத்தின் அடையாளம், இன்னும் மறைந்து கிடக்கிறது.